நட்பில்லா வாழ்க்கை – அது
உப்பில்லா உணவு
ஒப்பில்லா உறவுண்டு - சிறு
தப்பில்லா நட்பு அது
எதிர் பாராமல் செய்வதில்
கதிர் பாராமல் ஒளிரும் மதி அது
பதர் தராத கதிர்நெல் போன்ற தூய்மையானது
கதர் சட்டை போட்ட நேர்மையானது
புறத்தால் சமத்துவம் காட்டியது பள்ளிச்சீருடை- இது
அகத்தால் சமத்துவம் காட்டிய உள்ளச்சீருடை
மாதா, பிதா, குரு யாருமே கற்பிக்காமல்
மனிதன் தானாகவே கற்கும் முதல் வாழ்க்கைக்கல்வி
இது,
நாலந்தா பல்கலைக்கழகமும் நவிலாத பாடம்
நாலைந்து கல்மலை வைத்தாலும் மூழ்காத ஓடம்
அளவிற்கு மிஞ்சினாலும் நஞ்சாகாத அமுதம்- பூமி
பிளவிற்கும் அஞ்சாது தோல் தரும் இதயம்
செய்நன்றி கொன்றவற்கும்
உய்வு தரும் உயர்வானது -நட்பு
சமூக வலைத்தளங்களுக்கு அடித்தளமிட்ட
சமூக அறிவியல் – நட்பு
இது,
கடவுள் போன்றது வரையறை இல்லை
காற்றைப் போன்றது கல்லறை இல்லை
காசோலை போன்றது சில்லரை இல்லை
கன்னித்தீவு போன்றது முடிவுரை இல்லை
கண் போன்ற நட்பை போற்றுவோம் காலமுள்ளவரை
உயிர் போன்ற நட்பை போற்றுவோம் உலகமுள்ளவரை
மெய்யான நட்பை போற்றுவோம் மொழி உள்ளவரை
முற்றும் உணர்ந்த நட்பை போற்றுவோம் மூச்சு உள்ளவரை..!