சொர்க்கத்திற்கு சென்ற சுற்றுலா| Travel to Heaven| Tamil Poem| Thazhuva Kuzhandhai


வானக் கடலில் மேகப் படகுகள்
கானப் பறவைகள் சலசலக்கும் ஒலிகள்

ஆழ்ந்த நித்திரையிலிருந்து
ஆதவன் எழும் நேரம்

வாழ்ந்த நாளின் ஊக்கத்தொகையாய்
வளமிகு நாள் பரிசாய்க் கிடைத்தது

வஞ்சமில்லா நெஞ்சம் கொண்ட
அஞ்சாறு குஞ்சுக் குயில்களின் கானம் ஒலிக்கிறது

நெடுதூரப் பயணம்-பல
காடு கடந்தோம்

மலைகளின் அடிவாரம் கடந்து- கடல்
அலை காண விரும்பியது மனது


கடலலை மெல்லக் கொஞ்சும்
கன்னியாக்குமரி செல்லக் கெஞ்சியது
கெஞ்சிய இடந்தனை அஞ்சாமல் அடைந்தோம்

எழில் ததும்பிய இயற்கை கண்டு
மகிழ் தலும்பிய நேரம்……..

யாரைத்தான் காண இத்தனை வேகமோ?!
ஊரையே விழுங்க எத்துணை மோகமோ?

கரைகடந்த மகிழ்ச்சியிலிருந்த மனங்கள்
கரை கடந்துவந்த கடலலையில் ஆகின பிணங்கள்

சுற்றுலாச் சென்று சுற்றித்திரிந்த மனம்
சற்றும் மிஞ்சாமல் சிதைந்து போனது

மீன் பிடித்த படகுகளெல்ல்லாம்-இன்று
மீன்களுக்கு இரையாக்க இழுத்துச்செல்லப் பட்டது

அம்மா என்றழைத்த இளஞ்சிட்டுக்கள்
ஐயோ என அழுதக் கொடூரம்

மதம் பிடித்த மாந்தரைக் கொல்
மதம் பிடித்ததோ உனக்கு?-அம்மா தவிற வேறு
பதம் அறியாதப் பிஞ்சுக் குழந்தையும் பாராமல்
வதம் செய்து அழித்தாயே..!!

அன்னை மடி மீதேறி விளையாடிய வழக்கில்
தென்னை மரமேறிய எனக்கு இத்தனையும் காட்டி,
உன்னை பெண்ணுக்கு ஒப்பிட்ட எங்கள்
கண்ணைப் புண் செய்து பார்க்கிறாயோ..?

ஊர் முழுக்கக் கதறியும் கேட்கவில்லை சத்தம்
பேராழி சத்தத்தில் கடற்கரை கறை முழுதும் சுத்தம்
திருக்குறள் தந்த வள்ளுவச்சிலையும் மூழ்கி மொத்தம்,
அழுகுறல் அடங்கி ஊரெங்கும் நிசப்தம்

சுகமான சுற்றுலா சுனாமியில் முடிந்தது
சுகமான பயணம் சோகத்தில் ஆழ்ந்தது…!!!
Thazhuva Kuzhandhai