விந்தணுவாய் வந்த எனக்கு
சொந்தமாய் வீடளித்தாய் பத்து மாதம் தங்க
மயக்கம் தந்த போதும் – நீ
தயக்கம் காட்டவில்லை எனைத் தாங்க
எட்டி உதைத்தேன், முட்டிப் பார்த்தேன்
தொட்டுத்தடவி தட்டிக் கொடித்தாயேத் தவிர
வெட்டி எறிந்துவிடவில்லை எனை
உண்ட உணவில் பங்களித்து
கண்ட கனவில் கேளிக்கைக் காட்டினாய்
பத்து மாதம் சுமந்த
சொத்தென எனை ஈன்றாய்
அழ வைத்து தான் பெற்றெடுத்தாய்- ஆனாலும்
அழகாகத் தான் பெற்றெடுத்திருக்கிறாய்
மொழி தெரியாத நாவினால்
மழலையில் அம்மாவென வைத்தாய்
பிஞ்சுக் கைகளைப் பிடித்துக்
கொஞ்சி விளையாடினாய்
சிவந்த பாதங்களை
சொந்தங்களோடு தொட்டுதழுவினாய்
பித்த உடம்போடு
ரத்ததின் பகுதியைப் பாலாக்கி
மொத்தமாய் எனக்களித்தாய்
தொட்டில் போட்டுத் தாலாட்டினாய்
முட்டிப் போட்டு தவழ எனைப் பாராட்டினாய்
பிஞ்சுப் பருவம் கடந்த
அஞ்சு வயதில் பள்ளிக்கு அனுப்பினாய்
நெஞ்சமெல்லாம் பாசம் வைத்து கொஞ்சமாய் திட்டிப் பார்த்தாய்
நகரமெல்லாம் நான் போக வேண்டுமென
தகரப் பலகை வாங்கித் தந்து
அகரமெல்லாம் சொல்லித் தந்தாய்தப்பெல்லாம் நான் செய்த போதும் - எனக்காக
அப்பாவிடம் பரிந்து பேசினாய்
விளையாட அனுப்பி நேரமானால்
தொலைந்தே போனதைப் போல பதறித் தேடினாய்
வெந்நீர் வைத்தே எப்போதும் குளிப்பாட்டினாய்
கண்ணீர் வராமல் சிகைக்காய் தேய்த்தாய்
முழுப்பட்டினியாய் கிடந்தாவது – எனக்கு
மூன்று வேளை உணவளித்தாய்
தோன்றின் புகழொடு எனைத் தோற்றுவித்தாய்
வெற்றி கண்ட போதெல்லாம் எனைப்
போற்றி மனதுக்குள் புகழ்ந்த்தாய்
தோல்வி என ஏதேனும் நேர்ந்து விட்டால்
தோல் தட்டி அதை பிறர் பிழை என்றாய்
தோலுயர வளர்ந்துவிட்டேன்
பாலூட்டும் வயதில் காட்டிய அதே
பாசத்தை இன்னும் ஊட்டுகிறாய்
சுவாசிக்க மறந்தாலும் உனை நேசிக்க மறப்பேனா?
பிறப்பில் உடனிருந்தாய் - என்
இறப்பு வரை உடனிருக்க வேண்டுகிறேன்.
கேட்காமல் உயிரளித்தாய்
கேட்காமல் உறவளித்தாய்
கேட்காமல் உணவளித்தாய் – நீ
கேட்காமல் உனக்களிப்பேன் என்னையே அன்பளிப்பாய்
(உலகமே நானெனவிருக்கும் என் அன்னைக்கு, என்னைத் தவிர வேறெதனை சிறப்பான அன்பளிப்பாக் அளிக்க முடியும்.?. - அன்னைக்கு சமர்ப்பனம்.)